பதிவு செய்த நாள்
08
மே
2014
12:05
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் நடந்த தேர்த் திருவிழாவின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், நடுவழியில் தேரை நிறுத்தி விட்டு, மறியல் போராட்டம் நடத்தினர். நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், தீ மிதித் திருவிழா, நேற்று நடந்தது. மாலையில் நடந்த தேரோட்டத்தில், தேருக்கு கட்டை போடுபவருக்கும், மேற்கு தெருவை சேர்ந்த தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதையடுத்து, மேற்கு தெருவை சேர்ந்த சிலர், தேரிழுப்பவர்கள் சிலரை தாக்கினர். அதனால், தேரிழுப்பவர்கள், தாக்கியவர்களை கைது செய்யக் கோரி, புதுப்பட்டி பிரிவு சாலை சந்திப்பில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராசிபுரம் - ஆத்தூர் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாமக்கல் டி.எஸ்பி., ராஜேந்திரன், ராசிபுரம் தாசில்தார் மாதேஸ்வரி, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும், தேர் நிலை நிறுத்தப்படாமல், மேற்கு தெருவிலேயே நிற்கிறது.