பதிவு செய்த நாள்
10
மே
2014
09:05
மதுரை: மதுரை மாதரசி, அன்னை மீனாட்சி, இன்று சுந்தரேஸ்வரப்பெருமானை திருமணம் செய்து கொள்கிறாள்.மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றாள்.அம்மா, ""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருந்தால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும், என்றாள் அந்தப்பெண்.மீனாட்சி மனமுவந்து அந்தவரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா என்றால் "தங்கம். தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை.அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் "பொதிகை மலை தான் சின்னமாக இருந்துள்ளது. "மலையத்துவஜனை "மலை+ துவஜன் என்று பிரிப்பார்கள். "துவஜம் என்றால் "கொடி. "மலைக்கொடியை உடையவன் என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும்.இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு "தடாதகை என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர்.அப்போது, அசரீரி ஒலித்தது.""மகனே! கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும், என்றது.அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், "சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். "சுந்தரம் என்றால் "அழகு. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை "சுந்தர பாண்டியன் எனமக்கள் அழைத்தனர்.தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளிக்கிறாள் மீனாட்சி.
மீனாட்சி கல்யாணம் நடக்கும் நட்சத்திரம்: இந்த ஆண்டு சித்திரையில் இரண்டு பவுர்ணமி வருகிறது. இதில் மதுரை மீனாட்சிசித்திரை திருவிழா இரண்டாவது பவுர்ணமி அனுசரித்து கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழாவிற்கு நாள் குறிக்கும் போது, கடைசிநாளின் (தீர்த்தவாரி நிகழ்ச்சி) உச்சிக்காலத்தில் சித்திரை நட்சத்திரமும், மீனாட்சி திருக்கல்யாண நாளன்று உத்திர நட்சத்திரமும், கொடியேற்றும் போது கார்த்திகை நட்சத்திரமும் இருக்க வேண்டும். அந்த வகையில் இரண்டாவது சித்ராபவுர்ணமி நாளே பொருத்தமாக இருப்பதால், மாதத்தின் பிற்பகுதியில் இவ்வாண்டு திருவிழா நடத்தப்படுகிறது.
முதல் விருந்து யாருக்கு?: மணமகனாக கைலாயத்தில் இருந்து எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரரோடு, சிவகணங்களும் உடன் வந்தன. இதில் குண்டோதரனும் அடக்கம். அவனுக்கு கல்யாணச் சாப்பாடு வழங்கும் சடங்கு திருமண விருந்தில் முக்கியமானது. பழைய கல்யாண மண்டபத்தில் குண்டோதரனுக்கு சிலை உள்ளது. அவருக்கு மதியம் தயிர் சாதம், இளநீர் ஆகியவற்றை நை@வத்யமாக படைத்து வழிபடுவர். இதன் பின்னரே, மணமக்களுக்கு திருமண விருந்து நைவேத்யம் செய்யப்படும்.
12ம் திருவிழாவை தவற விடாதீர்: திருவிழாவில் ஆறு, பன்னிரண்டு ஆகிய இரு நாட்கள் மட்டும் சுவாமியையும், அம்மனையும் ரிஷப வாகனத்தில் தரிசிக்கலாம்.சொக்கநாதர் தங்க ரிஷபத்திலும், மீனாட்சி வெள்ளி ரிஷபத்திலும் பவனி வருவர். ஆறாம் திருவிழாவன்று, மதுரையில் அனல்வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற சம்பந்தரை நினைவூட்டும் விதத்தில் சைவ சமய ஸ்தாபித லீலையை, ஓதுவார் ஒருவர் விளக்கமாகச் சொல்வார். இதன் பின்னரே வீதியுலாவுக்கு சுவாமிகள் கிளம்புவர். பன்னிரண்டாம் நாளில் விழா நிறைவு பெறுவதை முன்னிட்டும் ரிஷபவாகனத்தில் பவனி வருவர். ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளை தரிசிப்போருக்கு எதிரிபயம் நீங்கும். கடன்தொல்லை தீரும். ஆரோக்கியம் மேம்படும். பன்னிரண்டாம் நாளில் தரிசிப்போருக்கு செல்வச்செழிப்பு உண்டாகும். வீண் செலவு அகலும். மோட்சகதி கிடைக்கும். ஒருவரது ஜாதகத்தில் எதிரி, கடன், நோய் ஆகியவற்றை ஆறாம் வீடும், செலவு, மோட்சம் ஆகியவற்றை பன்னிரண்டாம் வீடும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் அடைப்பு: மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா, தைப்பூசம், பங்குனியில் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம், ஆவணி புட்டுத்திருவிழா ஆகிய நாட்களில் நடை சாத்தப்பட்டு விடும். மூலவரே வெளியே வருவதாக ஐதீகம் என்பதால் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதேநேரம், மீனாட்சியும், சொக்கநாதரும் கோயிலைத் தவிர வேறெங்கும் தங்கும் வழக்கம் கிடையாது. இந்த நாட்களில் சுவாமி வெளியே சென்றாலும், இரவுக்குள் கோயிலுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அதேபோல, நடை சாத்திய நாட்களிலும் ஆறுகால பூஜை தவறாமல் நடத்தப்படும். நடை சாத்தியிருக்கும் போது, எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி எழும். நடை சாத்தும் நாட்களுக்குரிய பூஜையை முதல்நாளே நடத்தி விடுவர். முதல்நாள் இர@வ மறுநாளுக்குரிய திருவனந்தல், விளா, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை ஆகிய ஐந்து பூஜைகளையும் (காலை முதல் மாலை வரை நடக்கும் பூஜைகள்) சேர்த்தே நடத்தி விடுவார்கள். இரவில் கோயில் திரும்பியதும், வழக்கமான அர்த்தஜாமபூஜை, பள்ளியறை பூஜை நடக்கும்.
திருமணத்துக்கு முந்தைய சடங்குகள்: மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு முன்னதாக மணமகள் மீனாட்சியும், மாப்பிள்ளை சொக்கநாதரும் எங்கே இருப்பார்கள் தெரியுமா? யதா ஸ்தானம் என்னும் சேர்த்தி மண்டபம் சுவாமி சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. இங்கே மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்கள் @காலத்தில் இருப்பர். அதிகாலை 4.00 மணிக்கு இவர்கள் கல்யாண மண்டபம் கிளம்புவர். மண்டபத்துக்கு வந்ததும், பஞ்சோபசாரம் என்னும் ஐந்துவகை தீபாராதனை நடக்கும். அதன்பின், மணமக்களின் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்கள் (வேடமிட்டவர்கள்) இருவருக்கும் வேஷ்டி, பருப்புத்தேங்காய், பூணூல், ஓதியிடுதல்(பணம்) வழங்கப்படும். பின், சுவாமிக்கும் அம்பாளுக்கும் பட்டு வஸ்திரம் சாத்தப்படும். இதன் பின் சுவாமியும், அம்பாளும் சித்திரை வீதியில் அதிகாலையில் மணக்கோலத்தில் எழுந்தருள்வர். திருமணத்துக்கு முந்தைய நிலை என்பதால், அம்பாளை "கன்னி மீனாட்சி என்பர். மேலக்கோபுரவாசலில் அம்மன், சுவாமி இருவருக்கும் பாதபூஜை நடத்தப்படும். அதன் பின் மீனாட்சி கன்னி ஊஞ்சலில் ஆடி காட்சியளிப்பாள். மீண்டும் திருக்கல்யாண மண்டபம் வந்தபின்திருமண சம்பிரதாயம் நடக்கும்.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தரிசிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரை வீதிகளிலும், கோயிலுக்குள்ளும் இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஆனால், இப்போது பாதுகாப்பு, அதிக கூட்டம் போன்ற காரணங்களால் இந்த நிகழ்ச்சிகளைக் காண கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சிவாச்சாரியார்களைத் தவிர மற்றவர்களுக்கு இவற்றைப் பார்க்கும் பாக்கியமில்லை.
பாவக்காய் மண்டபம் பெயர்க்காரணம்: சித்திரை திருவிழா மொத்தம் 12 நாள் நடக்கிறது. பத்து நாட்கள் சுவாமியும், அம்மனும் மாசிவீதிகளில் பவனி வருவர். நான்காம் நாள் தெற்குமாசிவீதி, சின்னக்கடைதெரு வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்திற்கு சுவாமிகள் செல்வர். வில்லாபுரம் கண்மாய் பகுதியான இங்கு அந்தக் காலத்தில் பாகற்காய் தோட்டம் இருந்தது. பாகற்காய் "பாவக்காயாக மருவி "பாவக்காய் மண்டபம் என பெயர் வந்தது என்பர். ஐந்தாம் நாள் குதிரை வாகனத்தில் வடக்குமாசி, கீழமாசிவீதி வழியாக மீனாட்சிநாயக்கர் மண்டபத்திற்கு செல்வர். அங்கு "வேடர்பறி லீலை என்ற நிகழ்ச்சி நடக்கும். மதுரையின் பிறபகுதி பக்தர்களும் தரிசிக்கும் நோக்கத்தில் இதை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.