பதிவு செய்த நாள்
13
மே
2014
11:05
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த, திருவையாறிலுள்ள ஐயாறப்பர் ஸ்வாமி கோவில் தேரோட்டத்தில், சுற்றுவட்டாரத்திலுள்ள, ஏழு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறையும் ஐயாறப்பர் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, சித்திரை திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 7ம் தேதி, தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், ஆறு கிராமங்களில் இருந்து ஸ்வாமிகள் எடுத்து வரப்பட்டு, கோவில் சன்னதி முன், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. கடந்த, 11ம் தேதி தேரோட்ட விழா நடந்தது. இதில், ஐயாறப்பர் ஸ்வாமி, அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து, பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு, நான்கு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை தம்பிரான் ஸ்வாமிகள், எம்.எல்.ஏ.,க்கள் ரத்தினசாமி, ரங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பிரமணியன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் செந்தில் உள்பட சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, தேர் நிலைக்கு வந்தவுடன் காவிரி ஆற்றங்கரையில், இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாட்டை திருவையாறு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் வள்ளி, வேம்பு மற்றும் போலீஸார் ஈடுபட்டனர். தொடர்ந்து, 14ம் தேதி, காவிரியாற்றில், ஆறு கிராம ஸ்வாமி பல்லக்குகளும், தில்லை ஸ்தானத்தில் சங்கமிக்கிறது. தொடர்ந்து, தில்லை ஸ்தானம் பல்லக்குடன் சேர்த்து, ஏழு கிராம ஸ்வாமி பல்லக்குகளும், திருவையாறு வீதிகளில் உலா வரும் காட்சி நடக்கிறது. பின், தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன், ஆறு ஊர் பல்லக்கு ஸ்வாமிகளும் கோவிலை அடைந்து, தீபாராதனை காண்பித்து, அந்தந்த ஊர்களுக்கு திரும்பும் வைபவம் நடக்கிறது. ஏற்பாட்டை தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.