பதிவு செய்த நாள்
13
மே
2014
11:05
புதுச்சேரி: சஞ்சீவி நகர் திரவுபதியம்மன் கோவில் பிரமோற்சவத்தையொட்டி, நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. சஞ்சீவி நகர் கிராமத்தில் சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன.இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி, காலை மாரியம்மன் வீதியுலா, 12.00 மணிக்கு கெங்கை அம்மன், மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல், மாலை 6.00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. கடந்த, 7ம் தேதி மாலை 4.00 மணிக்கு அரக்கு மாளிகை கொளுத்துதல், இரவு மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. கடந்த 8ம் தேதி பகாசூரனுக்கு அன்னம் அளித்தல், 9ம் தேதி அர்ச்சுனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று, இரவு 7:30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், திரவுபதியம்மன் அருள்பாலிக்க, பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தீ மிதி திருவிழாவை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில் வாசிகள் கண்டு ரசித்தனர்.