விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் நேற்று தேர் திருவிழா நடந்தது. பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேர் திருவிழா நடந்தது. உற்சவர்கள் சிவன், பார்வதி, வினாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 10 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக வலம் வந்து 12.10 மணிக்கு கோவிலை சென்றடைந்தது. கணேசன் குருக்கள், பாபு குருக்கள் பூஜைகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலைய துறை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் ரவி, தக்கார் ஆய்வாளர் கவியரசு, ஊராட்சி தலைவர் மீனாட்சி ஆறுமுகம் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகரசுகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.