நிலக்கோட்டை நடராஜர் கோயில் திருப்பணி தொடர வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 02:05
நிலக்கோட்டை : நிலக்கோட்டை நடராஜர் கோயில் திருப்பணியை மீண்டும் துவக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். நிலக்கோட்டை நடராஜர் கோயில் சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக நடராஜர் ஆடும் நிலையில் உள்ளது. 1909ல் நடராஜர், சிவகாமி அம்மையார், மாணிக்கவாசகர், நவக்கிரகங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கோயில் கோபுரம் மூன்று ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட இழுபறிக்கு பின் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி துவங்கியது. ஓராண்டாக நடந்த திருப்பணி, இக்குழுத் தலைவர் இறந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இக்கோயிலுக்கென பொறுப்பு செயல் அலுவலர்களையே அறநிலையத்துறை நியமித்து வந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு, தனி அலுவலர் நியமிக்கப்பட்டதால் கோயில் கட்டும் பணி மீண்டும் துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அலுவலரும் கோயில் கட்டும் பணியை துவக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. நடராஜர் கோயில் திருப்பணியை மீண்டும் துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.