சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில், இரண்டு நாள் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சின்னமனூரில், செப்பேடுகள் புகழ் பெற்ற சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில், சித்திரைத் திருவிழா கடந்த 3 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் மண்டகப்படிகளின் வரிசைப்படி சுவாமியும் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். கடந்த 10ம் தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் சுவாமியும் அம்மனும் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மன் மற்றும் பிரியாவிடை அம்மனுக்கு, அபிஷேகம் அர்ச்சனை செய்யப்பட்டு, மாலையில் தேரோட்டம் துவங்கியது. நிலையில் இருந்து வடம்பிடித்து இழுக்கப்பட்ட தேர், வடக்கு ரதவீதியில் சென்று கொமுக்கில் நிறுத்தப்பட்டது. நேற்று காலை வழக்கமான சாஸ்திரப்படி கொமுக்கிலிருந்து தேர் இழுக்கப்பட்டு கண்ணாடிக்கடை மூலையில் நிறுத்தப்பட்டது. தேரில் சுவாமியும் அம்மனும் திருத்தேர் வீதிஉலா அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிதனர். மாலையில் துவங்கிய தேரோட்ட நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதிகளின் வழியாக சங்கரா கோஷத்துடன் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.