திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2025 05:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய தாமிர கொப்பரையை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி உபயமாக வழங்கினர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். அந்த தீப தாமிர கொப்பரை 1993 முதல் கடந்த ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு டிச. 3ல் மலை மேல் மஹா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்னேமுத்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரை திருவண்ணாமலையில் தயாரிக்கப்பட்டது. அந்த தீப கொப்பரை இன்று கோயிலுக்கு வழங்கப்பட்டது.