பதிவு செய்த நாள்
19
மே
2014
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் உற்சவமான நேற்று, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, அதிகாலை 4:00 மணிக்கு, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 5:30 மணிக்கு தேரை நிலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன், கோவிந்தா, கோவிந்தா என, கோஷமிட்டவாறு, வடம் பிடித்து இழுத்தனர். வீதிகள் வழியே இழுத்து வரப்பட்ட தேரானது, காலை 11:00 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, நகரின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேரோட்டத்தை ஒட்டி, நான்கு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 12 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள், 225 காவலர்கள், 100 சிறப்பு இளைஞர் காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.