பதிவு செய்த நாள்
19
மே
2014
11:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்றுமுன்தினம் அதிகாலை வரை, பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வரிசையில் நின்று வழிபட்டனர். தமிழகளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களும் ஆண்டுதோறும் பங்குபெற்று வருகின்றனர். நடப்பாண்டு வரும் 11 ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. அலங்கரிப்பட்ட மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. 40க்கும் மேற்பட்ட பூச்சொரிதல் ஊர்வலம், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு, நேற்றுமுன்தினம் அதிகாலை வரை சேர்ந்தது. திருவிழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொண்டவர்கள், இன்று முதல் காப்பு கட்டி கொண்டு விரதம் இருக்க துவங்குகின்றனர். வரும் 26ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 27ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்க உள்ள வாண வேடிக்கை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வரும்8ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.