பதிவு செய்த நாள்
19
மே
2014
01:05
ஆர்.கே.பேட்டை: அம்மனை அலங்கரிக்க பக்தர்கள் விதவிதமாக சிந்தித்து வருகின்றனர். பக்தர்களின், 10 மணி நேர உழைப்பில் எல்லையம்மனுக்கு நவதானியத்தில் காப்பு நடந்தது. வங்கனூர் கிராம மக்கள் பல நூற்றாண்டுகளாக, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி பகுதியில் உள்ள தொண்டை நாடு எல்லையம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். கடந்த பிப்.,யில் வங்கனூரில் புதிய கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள், அம்மனுக்கு தினசரி விதவிதமான பூஜைகள், அலங்காரம் செய்து வருகின்றனர். நாணய அலங்காரத்தில் தனலட்சுமி, காய்கறி பந்தல், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, சங்காபிஷேகம், பழப்பந்தல் என, விதவிதமாக அம்மனை அலங்கரித்து தங்களின் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், நேற்று முன்தினம், அம்மனுக்கு நவதானிய காப்பு நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த எச்சான கோத்திரத்தார், 10 மணி நேரம் உழைத்து நவதானியங்களால் அம்மன் விக்ரகத்தை அலங்கரித்தனர். நவதானிய படையலும், முளைப்பாரியும் அம்மனுக்கு படைக்கப்பட்டது. புதுவிதமான நவ தானிய அலங்காரத்தில் அம்மனை, பக்தர்கள் வழிபட்டனர். முளைவிட்ட தானிய வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.