சபரிமலை: வைகாசி மாத பூஜை முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. பிரதிஷ்டை தின பூஜைக்காக ஜூன் ஏழாம் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கிறது. வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14ம் தேதி மாலையில் நடை திறந்தது. மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. 15ம் தேதி முதல் நேற்று வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்மனபூஜை, படிபூஜை போன்றவையும், நெய்யபிஷேகமும் நடைபெற்றது. நேற்று மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக சகஸ்ரகலச பூஜை நடைபெற்றது. கலசங்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைநடத்திய பின்னர் பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி அதை எடுத்து கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு படிபூஜையும், ஒன்பது மணிக்கு அத்தாழபூஜையும் முடிந்து இரவு பத்து மணிக்கு நடை அடைக்கபபட்டது. அடுத்து பிரதிஷ்டை தினபூஜைக்காக வரும் ஏழாம் தேதி மாலை நடை திறக்கிறது. எட்டாம் தேதி பிரதிஷ்டைதின சிறப்பு பூஜைக்கு பின்னர் அன்று இரவு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14ம் தேதி மாலை நடை திறக்கிறது.