பதிவு செய்த நாள்
20
மே
2014
11:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், 400 ஆண்டுகளாக மொட்டை கோபுரங்களாக காட்சியளித்த, வடக்கு, தெற்கு ராஜகோபுர பணிகள் புதுப்பொலிவைப் பெற்று, முடியும் தறுவாயில் உள்ளன.
12ம் நூற்றாண்டு கோவில்: ராமாயணத்துடன் தொடர்புள்ள, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், 12ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இக்கோவிலில், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், தேவகோட்டை நகரத்தார், ஆன்மிக பெரியோர்கள் இணைந்து, மூன்று பிரகாரங்கள், கிழக்கு, மேற்கு ராஜ கோபுரங்கள் அமைத்தனர். சிலைகள், ஓவியங்களுடன் சிறந்த கட்டடக் கலைக்கு, எடுத்துக்காட்டாக அவை விளங்குகின்றன. அதேபோல், வடக்கு மற்றும் தெற்கில் ராஜ கோபுரங்கள் எழுப்ப, 400 ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரம் மன்னர்கள் அடித்தளம் அமைத்தனர். ஆனால், என்ன காரணத்தாலோ, அப்பணிகள் முழுமை பெறவில்லை. அவை, இன்று வரை மொட்டை கோபுரங்களாக காட்சியளித்தன. அவற்றை முழுமைப்படுத்த மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2001ல், வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் கட்ட, காஞ்சி சங்கரமடம் பொறுப்பேற்று, 5 அடி உயரத்திற்கு கட்டுமான பணிகள் நடந்தன. அதன்பின், சில காரணங்களால் அப்பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் இரண்டு கோபுரங்களும் மொட்டையாகவே காட்சியளித்தன. இந்நிலையில், 2011 முதல், கோவை தொழிலதிபர் வசந்தகுமார், வடக்கு ராஜகோபுரத்தையும், சிருங்கேரி சாரதா பீடம் சுவாமிகள் தெற்கு ராஜகோபுரத்தையும் கட்டி வருகின்றனர். இதில் ஐந்து நிலைகள், 91 அடி உயரத்தில் கட்டப்படும் தெற்கு ராஜகோபுர பணி, 70 சதவீதம் முழுமை பெற்றது. இன்னும் கோபுர கலசம், யாழிகள், சுதைகள், பெயின்ட் பூசும் பணி மட்டுமே நடைபெற உள்ளது.
2015ல் கும்பாபிஷேகம்: கோபுர திருப்பணி முடிந்ததும், 2015ல் கும்பாபிஷேகம் நடத்த வாய்ப்பு உள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள், பல தடைகளைத் தாண்டி, முழுமை பெறுவதை கண்டு, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.