பதிவு செய்த நாள்
20
மே
2014
12:05
காஞ்சிபுரம் : கயிலாசநாதரின் மூலவர் சன்னிதி தாமதமாக திறக்கப்படுவதால், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், ஏராளமான சுற்றுலா பக்தர்கள் தினசரி ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கயிலாசநாதர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில், வரலாற்று சிறப்புமிக்கது. கட்டட கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் நிறைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, சுற்றுலாவாக வருவோர் கோவிலை கண்டு அதிசயிக்கின்றனர். கோவில் நடை காலை 7:30 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 6:00 மணி வரையிலும், திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோவிலின் நடை திறப்பதில், தினமும் ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால், மூலவர் சன்னிதியை சரியான நேரத்திற்கு திறந்து, பூஜைகள் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து, கயிலாசநாதர் கோவிலின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து, அர்ச்சகரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.