பதிவு செய்த நாள்
29
மே
2014
12:05
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜூன் மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள, ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் கோட்டாவை, நேற்று, வெளியிட்டது. ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, சில காரணங்களுக்காக ரத்து செய்கின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளை, தேவஸ்தானம், பக்தர்களுக்கு, குலுக்கல் முறையில் அளித்து வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற, பக்தர்கள், சேவா டிக்கெட் தினத்திற்கு முந்தைய நாள், திருமலையில் உள்ள மத்திய விசாரணை மையத்தை அணுக வேண்டும். இதற்கென உள்ள கவுண்டரில், காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணிவரை, பெருவிரல் ரேகை பதிவு மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், மாலை, 5:00 மணிக்கு மேல் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தொலை பேசி எண்ணிற்கு, குறுந்தகவல் அனுப்பப்படும். பின் அவர்கள், இரவு, 8:00 மணிக்குள், மத்திய விசாரணை மையத்திற்கு சென்று, தங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, மறுநாள் காலை ஏழுமலையானை தரிசிக்கலாம். இந்த வகையில், ஜூன் மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட்களுக்கான கோட்டா, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.