பதிவு செய்த நாள்
30
மே
2014
02:05
திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம், அடாவடி வசூல் நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. திருப்புவனம், புஷ்பவனேஷ்வரர் கோயில் முன் உள்ள நந்திக்கும் மடப்புரம் கரையில் உள்ள நந்திக்கும் இடையே வைகையாற்றில் 21 புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாகவும் முன்னோர்களின் அஸ்தியை இங்கு கரைப்பதன் மூலம் காசிக்கு சென்று கரைப்பதற்கு ஒப்பாகும். இதனால் அமாவாசை மற்றும் பிற நாட்களில், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர். தற்போது, வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால், தனியார் சிலர் ஆற்றில் ஊற்றுக்களை தோண்டி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம், ரூ.100 முதல் 500 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். இது குறித்து, பல முறை எழுந்த புகாரை தொடர்ந்து, பொதுப்பணி, வருவாய், போலீஸ் துறை இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேரூராட்சி சார்பில் சிமிண்ட் தொட்டி கட்டினர். தர்ப்பணம் செய்வதற்கு, நபருக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி, தொடர்ந்து, தர்ப்பணம் செய்ய வருபவர்களிடம், அடாவடி வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, செயல் அலுவலர் செந்தில் கூறுகையில்,"" கோயிலில், நிர்ணயித்த கட்டணம் தான் வாங்கவேண்டும். பேரூராட்சி சார்பில், தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. தேவஸ்தானம் சார்பிலும், தண்ணீர் தொட்டி கட்டப்படும். தனியார் சிலர், ஆக்கிரமித்து கட்டியுள்ள தொட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, மின்சப்ளையை துண்டிக்க கூறியும், மின்வாரியம் மெத்தனமாக உள்ளது, என்றார்.