பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, கோவில் விழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில், கம்ப பெருமாள், பிடாரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 14ம் தேதி, கம்பபெருமாள் ஸ்வாமி சக்தி அழைத்தல் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் ஸ்வாமிக்கு அபிஷேகம், தீபாராதனை பூஜைகள் செய்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. 17ம் தேதி கருட ஊர்வலம், 23ம் தேதி ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 25ம் தேதி, மாரியம்மன் ஸ்வாமி சக்தி அழைத்தல் நடந்து, ஸ்வாமி வீதி உலா நடந்தது. 27ம் தேதி, பிடாரியம்மன் சக்தி அழைத்தலுடன் விழா துவங்கி மாவிளக்கு, பொங்கல் படையல் செய்து பக்தர்கள் வழிபாடு செய்து, ஸ்வாமி வீதி உலா நடந்தது. நேற்று காலை 9 முதல் 11.30 மணி வரை, பக்தர்கள் தீ மிதித்து, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.