பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
10:06
செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பீரங்கிமேட்டு அருணாசலேஸ்வரர் கோவில் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்தனர். பழைய கோவிலை புதுப்பித்து, புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை வாயிற் கோபுரம், வெங்கடேச பெருமாள் சன்னதி உட்பட பல புதிய சன்னதிகளை அமைத்துள்ளனர். கும்பாபிஷேக விழா மே மாதம் 26ம் தேதி துவங்கியது. 29ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை 5 மணிக்கு சிவலிங்க பிரதிஷ்டை நடந்தது. 7 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு மூலவர் கோபுரம், ராஜகோபுரம், வாயிற்கோபுரம், வெங்கடேச பெருமாள் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்தனர். திருவண்ணாமலை தேவஸ்தானம் சிவானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் செய்தனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங் காவலர் ஏழுமலை, திருப்பணிக்குழு செல்வம், ஆசிரியர்கள் ஜெயக்குமார், ராம்மூர்த்தி, கண்ணாயிரம் உள்ளிட்ட குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். எம்.எல்.ஏ., கணேஷ்குமார், பேரூராட்சி தலைவர் மஸ்தான், வல்லம் ஒன்றிய சேர்மன் அண்ணா துரை, தொழிலதிபர்கள் கோபிநாத், பாபு, வழக்கறிஞர் ராமச்சந்திரன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.