புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு, நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. புதுச்சேரி –திண்டிவனம் சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று, ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்து வருகிறது. அதேபோல், மாதந்தோறும் புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீராமருக்கு பால் அபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், புனர்பூச நட்சத்திரத்தையொட்டியும் மாலை 4:00 மணிக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள திரவியங்களுடன் கூடிய சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.