பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
11:06
ராமேஸ்வரம் : நூறு ஆண்டு பழமையான சுவாமி கற்சிலை, ராமேஸ்வரம் கடற்கரையில் பாசி படர்ந்த நிலையில் கிடந்தது. மே 30ம் தேதி நள்ளிரவில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள், மீன்பிடித்து விட்டு நேற்று காலை, கரை திரும்பினர். இந்திய, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்த ஒரு படகின் வலையில், நூறு ஆண்டுக்கு பழமையான சுவாமி கற்சிலை சிக்கியது. இதனை கண்ட மீனவர்கள், ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்து, யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் போட்டு விட்டனர். பழமையான சுவாமி சிலை, கிருஷ்ணர் வடிவம் உள்ளதாகவும், கடத்தல்காரர்கள் சிலையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற போது, நடுக்கடலில் இந்திய, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் கண்டதும், சிலையை தூக்கி கடலுக்குள் வீசி உள்ளனர். வெகு நாட்கள் கடலுக்குள் இருந்ததால், சிலையில் கடல் பாசி படிந்து உள்ளதாக, மீனவர்கள் தெரிவித்தனர். கடற்கரையில் கிடந்த சிலையை மீட்க, நேற்று மாலை அதிகாரிகள் யாரும் வரவில்லை.