பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி மற்றும் தட்டாரப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமம், மாலை, புற்று மண் எடுத்தல், பிரவேசபலி, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை, பல்வேறு யாக சாலை பூஜையும், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம் போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று, காலை தீபராதானையும், காலை, 9 மணிக்கு யாத்ரா தானமும் நடக்கிறது. காலை, 9.30 மணிக்கு விமான கலச கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு, மேல் மகா சக்தி மாரியம்மனுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை, தர்மபுரி கோட்டை காமாட்சியம்மன் கோவில் முதன்மை சிவாச்சாரியார் செல்வமுத்து குமாரசாமி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தட்டாரப்பட்டியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், அனுக்ஞை, கணபதி, லட்சுமி நவக்கிரஹ ஹோமம், காப்பு கட்டுதல், ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வருதலும் நடந்தது. தொடர்ந்து, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை, கோபுரகலசம், புதிய மூர்த்திகள் கரிகோலம் மற்றும், இரண்டாம் கால யாக பூஜை கலசம் வைத்தலும், தொடர்ந்து, மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை, நான்காம் கால யாக பூஜையும், கணபதி, மூலவர் மற்றும் கோபுரம், நவக்கிரஹ மூர்த்திகளுக்கு தீபாராதனையும் நடந்தது. காலை, 5 மணிக்கு மாரியம்மன் கோபுரம் மூலவர் உட்பட சாமிகளுக்கு தீபராதனை நடக்கிறது. காலை, 6.15 மணிக்கு மேல் மாரியம்மன் மற்றும் ஓம்சக்தி அம்மன், கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை, 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.