பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், எதிர்சேவை நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டது.மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது திருத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், ஸ்தலசயனப்பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், 12 ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், கருடர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. சுவாமி, கோவிலில் தரையில் சயன கோலத்தில் காட்சியளிப்பதால், நிலம் சார்ந்த பிரச்னைகளுக்கு, பரிகார தலமாக புகழ்பெற்றது. கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார திருநாள், பங்குனி உத்திரம், பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய உற்சவங்களாக நடத்தப்படுகின்றன. இத்தகைய உற்சவங்களின்போது, சுவாமி, கொடிமரம் அருகில், அலங்கார சேவையில் அருள்பாலிப்பார். அச்சேவையை, சுவாமி காணவும் (எதிர்சேவை காட்சி), பக்தர்கள் கண்டுகளிக்கவும், அக்காட்சி பிம்பம் தெரியும் வகையில், தற்போது, 6 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது.