பதிவு செய்த நாள்
06
ஜூன்
2014
02:06
தஞ்சாவூர்: திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதென, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், வரும், 13ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தோஷங்கள் நீங்க பரிகார பூஜைகள் செய்வர். இதற்காக, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகள் மூலம், பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடந்தது. குருபெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக, கோவிலை சுற்றி தகரப்பந்தல் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்கும் விதமாக, போதிய ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோவில் முன், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பு கட்டைகள் உதவியுடன் ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும். கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அவசர சிகிச்சை வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வேன் வசதியுடன் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கும்பகோணம் பகுதிகளிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும், என அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., சந்திரசேகரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகர், மாநகராட்சி ஆணையர் குமார், ஆர்.டி.ஓ., தேவதாஸ், டி.எஸ்.பி., சுகுமாரன், தாசில்தார் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.