பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
10:06
அழகர்கோவில்: கருடன் வட்டமிட பக்தர்களின் ’அரோகரா’ கோஷம் முழங்க, அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அழகர்கோவில் மலை மீது அமைந்துள்ள இக்கோயில் திருப்பணிகள் ரூ. 5 கோடியில் நடந்தது. கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்ச்சியாக ஜூன் 2 முதல் 3 நாட்கள் பூர்வாங்க பூஜை நடந்தது. ஜூன் 4ல் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளியிருந்த மூலவர் சுவாமிகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். ஜூன் 5 மாலை கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, புண்யாகவாசனம், யாகசாலை பிரவேசம், கோ பூஜை, கஜபூஜையுடன் யாகசாலை துவங்கியது. மூலவருக்கு 33 குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 7 என 40 குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 6 மணிக்கு மங்கள விநாயகர் பூஜை, பூர்ணாஹூதி முடிந்து, காலை 7.30 மணிக்கு மேள, தாளம் முழங்க குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 8.10 மணிக்கு கருடன் வட்டமிட, பக்தர்களின் ’அரோகரா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ’ஸ்பிரே’ மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன், அறநிலையத் துறை கமிஷனர் தனபால், தக்கார் வெங்கடாஜலம், அரசின் டில்லி பிரதிநிதி ஜக்கையன், நிர்வாக அதிகாரி வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று முதல் மண்டல பூஜை துவங்குகிறது.