உடுப்பியில் கிருஷ்ணர் கோயில் மட்டுமின்றி, தரிசிக்க வேண்டிய வேறுசில புண்ணிய தலங்களும் உண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது அருகில் இருக்கும் பாஜகக்ஷேத்திரம். த்வைத தத்துவத்தை உலகுக்கு அருளிய மத்வரின் அவதார ஸ்தலம் இது. உடுப்பியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் நிறைய <உண்டு. மத்வர் அவதரித்த இல்லத்திற்கு அருகிலிருந்த சிறு குன்றின்மீது சிறு கோயில் ஒன்று இருந்தது; மாயா துர்கா கோயில் என்றார்கள் ஊர்க்காரர்கள். உச்சியை அடைந்து கோயிலுக்குள் நுழைந்தால்... அங்கே கருவறையில் மங்கல நாயகியாய் காட்சியளித்தாள் மாயா துர்கா.
சிறிய மூர்த்தம்தான் என்றாலும் <உலகையே வசமாக்கும் சாந்நித்தியம் தேவியின் திருமுகத்தில்! கம்சனின் கைகளில் இருந்து நழுவி உன்னைக் கொல்லப் போகும் கண்ணன் யதுகுலத்தில் வளர்கிறான் என்று எச்சரித்தாளே... அந்த மாயாதேவிதான் இவள் என்று புராணத்தை விவரித்தார்கள் கோயில் ஆட்கள். அதுமட்டுமா? ஸ்ரீமத்வர் சிறுவனாக இருந்தபோது பெரும்பாலும் அந்தக் கோயிலில்தான் பொழுதைக் கழிப்பார் எனும் தகவலையும் அவர்கள் விவரித்தார்கள்.