குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர: குரு ஸாக்ஷாத் பரம் பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:
ஹரி ஓம், நன்றாக குரு வாழ்க, குருவே துணை என்று கற்றுக் கொடுத்த பின்தான், நம் நாட்டில் சுவடி துவக்குதல் வழக்கம். பழங்காலத்து ஏட்டுச் சுவடிகளில் எல்லாம் இதைப் பார்க்கலாம். உலக வாழ்வில் உடலை வளர்ப்பவள் தாய்; உயிரை வளர்ப்பவன் இறைவன்; ஆனால், உலகிற் பிறந்தவர்கள் நல்வாழ்வு நடத்த உயிருக்கும் உடலுக்கும் பெரிதாகிய அறிவை வளர்ப்பவன் ஆசிரியன். இந்த ஆசிரியத்தன்மையில் அமர்ந்து சகல உயிர்க்கும் ஒரு குருவாய் இறைவன் இருக்கும் திருக்கோலமே சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவம். குருவில்லா வித்தை உருவில்லை என்பதுபோல ஆன்ம குருவில்லாத வித்தையும் பயனுடையதாகாது.
அறிவே உருவாய் அமைந்த திருமுகமும், சின்முத்திரையும், வற்றாத கல்வி நிறைந்த சித்திரப் பொற்குடமும், தாமரை மலரும், அக்கமாலைக் கோவையும் பூண்ட அபயக் கரங்களும், தண்டையமைந்த திருத்தாளும் கொண்டு, கண்டார் மனத்தைக் கவருகின்றது, இச் சித்திரம்.