குன்றத்தில் நாளை விசாக திருவிழா; வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2014 12:06
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூன் 11) வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு பாலாபிஷேகம் தொடங்குகிறது.அதிகாலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் சுமந்துவரும் குடங்களில் உள்ள பால், சுவாமிக்கு காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்படும்.முதன்முறையாக பக்தர்களை வரவேற்க, நான்கு இடங்களில் பன்னீர் ஸ்பிரே மிஷின்கள் வைக்கப்பட உள்ளன. திருவாட்சி, கம்பத்தடி மண்டபங்களில் மின்விசிறிகள் அமைக்கப்படுகின்றன. சுவாமி தரிசனம் முடித்து மடப்பள்ளி மண்டபம் வழியாக பக்தர்கள் வெளியில் செல்ல ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.பால்குடம் சுமந்துவரும் பக்தர்கள் திருவாட்சி மண்டபம், சிறப்பு கட்டண வழியாக, கம்பத்தடி மண்டபத்தில் நந்தியை சுற்றி சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திற்கு செல்பவர்கள் வழக்கம் போல் சென்று தரிசனம் செய்யலாம்.வழிகாட்டி அமைக்கப்படுமா: மதுரை நகரில் இருந்து வரும் பக்தர்கள் மேம்பாலம் வழியாகதான் கோயிலுக்கு வர வேண்டும். பாலத்தின் ஆரம்ப பகுதியில் பாலத்தின் மேல் செல்வதற்கு வழி தெரியாமல் பக்தர்கள் இடதுபுற ரோட்டில் சென்றால், அடைக்கப்பட்டிருக்கும் ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் பின்புறமாக திரும்பி பாலத்திற்கு வரவேண்டும். எனவே பாலத்தின் ஆரம்பத்தில் போலீசாரை நியமித்து பக்தர்களுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் அங்கு வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும். ரயில்வே கேட் பகுதி அடைப்புகளை தற்காலிகமாக நீக்கி பக்தர்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.