பதிவு செய்த நாள்
14
ஜூன்
2014
02:06
கோவை : பிரதோஷ வேளையில், நரசிம்மபெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன் கிட்டும் என, ஆன்மிக சொற்பொழிவாளர், திருச்சி கல்யாணராமன் பேசினார்.கோவை, ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் 12வது நாளாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று பிரகலாத சரித்திரம் என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:விபீஷணன் ராவணனை பார்த்து, உன்னைவிட வரத்தினால் பெற்ற பலத்தில் வாழ்ந்த, இரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மபெருமாள் தான், ராமனாக அவதரித்து வந்திருக்கிறார் என்று உபதேசம் செய்தார். இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். யாராலும் தான் சம்ஹாரம் செய்யப்படக்கூடாது என்ற வரத்தை பெற்றார். ஓம் இரண்யாய நமஹ என்று, தன்னை கடவுளாக அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறினான்.நானே கடவுள் என்று சொன்ன இரண்யகசிபுவின் மகன், பிரகலாதன், நாராயணனே கடவுள் என்றான். இதைப் பொறுக்காத இரண்யகசிபு, பிரகலாதனை, கடலிலும், நெருப்பிலும் போட்டான்; யானையை விட்டு மிதிக்கச்செய்தான். விஷம் கொடுத்தான். ஆனால், நாராயணன் நாமா அவனை காத்தது. என்னால் காணமுடியுமா, உன் நாராயணனை? என, கேட்டான் இரண்யகசிபு. இந்த என்னால் என்பது போனால், இறைவன் தன்னால் வருவான் என்றான் பிரகலாதன். இந்த துாணில், இறைவன் இருக்கிறானா? என்று கேட்டான். எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூறினான், பிரகலாதன்.இரண்யன் நானே கடவுள் என்று பிடிவாதம் செய்தான். நாராயணனே கடவுள் என்று பிரகலாதன் பிடிவாதம் செய்தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பகவான் நரசிம்மபெருமாளாக வந்து, பிரதோஷ வேளையில் இரண்யகசிபுவை வதம் செய்தார். பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்வதை போல், நரசிம்மபெருமாளை வணங்கவேண்டும். அப்பொது நமக்கு நற்பலன் கிடைக்கும். இவ்வாறு, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.