பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
பேரூர் : மருதமலை அடிவாரத்திலிருந்து, கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. மருதமலை அடிவாரத்திலிருந்து மலைப்பாதை வழியே, தேவஸ்தான பஸ், சுற்றுலா பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் கோவிலுக்கு சென்று வருகின்றன. இதுதவிர, ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். இதையடுத்து, மலைப்பாதை ரோட்டின் இருமருங்கிலும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், மலைப்பாதையின் இருமருங்கிலும் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கோவிலில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதி, பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அப்போது, பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ தொண்டர்கள், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மருதமலையை துாய்மைப்படுத்துவோம் என, விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். இப்பணியில், ட்ரீ டிரஸ்ட் நிர்வாகி யோகநாதன், சமூகஆர்வலர் பரமேஸ்வரன், கோவை குளங்கள் காப்போம் அமைப்பினர், மருமதலை ஐ.ஓ.பி., காலனி குடியிருப்போர் நலச்சங்கம், மருதமலை பக்தர்கள் பேரவை, மருதமலை டெப்போ அரசு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.