பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் உண்டியலை, திறக்க முடியாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் தவித்தனர். வால்பாறை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் பணம் ஆறுமாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்துஅறநிலையத்துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் உண்டியலை திறக்க, முயன்றபோது பூட்டை திறக்க முடியவில்லை. இதனையடுத்து சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மட்டும் திறக்கப்பட்டது, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணினர். இதில் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 170 பணம் மற்றும் 12.9 கிராம் தங்கம், 101.20 கிராம் வெள்ளி இருந்தது. துணை ஆணையாளர் அனிதா கூறுகையில், கோவிலுக்கு சொந்தமான கடைகளில், நீண்ட கால நிலுவையில் உள்ள தொகை ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 877ஐ விரைவில் வசூல் செய்யப்படும். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கோவில் உண்டியல் பாதுகாப்பு கருதி, விரைவில் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், என்றார்.
அதிகாரியை மிரட்டிய பூக்கடை வியாபாரி: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்த போது, அங்கு வந்த பூக்கடை வியாபாரி கருப்புசாமி,65, (முருகபக்தர்), கோவில் உதவிஆணையாளர் அனிதாவிடம், கோவில் உண்டியல் பணத்தை கோவில் திருப்பணிக்காகதான் செலவிட வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை இங்கிருந்து எடுத்துச்செல்லக் கூடாது என்று கூறி, திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து அதிகாரிகள் போலீசுக்கு புகார் செய்ய முயன்ற போது, கோவில் நிர்வாகிகள் தலையிட்டு, சமாதானம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.