பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
12:06
காங்கயம் : சிவன்மலை கோவில் கும்பாபிஷேகத்துக்கு, அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 4ல் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., திவாகரன் தலைமை வகித்தார். காங்கயம் எம்.எல்.ஏ., நடராஜன், தாசில்தார் குணசேகர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றார். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய வேண்டும்; அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதோடு, அடி வாரத்தில் இருந்து மலைக்கு, அறநிலையத்துறை மூலம் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் சிறப்பு மருத்துவ குழுக்கள், "சிசி டிவி கேமராக்களுடன் கூடிய பாதுகாப்பு மற்றும் மலை மீதும், அன்னதானம் போடும் இடங்களிலும் நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி மேற்கொள்ள வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுப் பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மறு ஆலோசனை கூட்டம், வரும் 20ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அரசு துறை அதிகாரிகள் "ஆப்சென்ட்: பக்தர்கள் அதிகமாக பங்கேற்கும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து நடந்த இக்கூட்டத்தில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை உயரதிகாரிகள், போக்குவரத்து கழகம், பொதுப்பணித்துறை, மருத்துவ துறை என அரசு துறைகளின் உயரதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், மீண்டும் ஒரு கூட்டம் நடத்த வேண்டியுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.