பதிவு செய்த நாள்
20
ஜூன்
2014
12:06
வாஷிங்டன் : இந்து மத புரோகிதர்களின் பகவத்கீதை மற்றும் உபனிஷத்களின் முழக்கத்துடன் அமெரிக்க பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று துவங்கியது. சர்வதேச இந்து மத தலைவர் ராஜன் ஜெத் தலைமை ஏற்று, வாஷிங்டன் டிசி.,யில் பகல் 12 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) இந்த வழிபாட்டை நடத்தி உள்ளார்.
இந்து மத வழிபாடு : அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு வழிபாட்டிற்காக அழைக்கப்பட்டிருந்த சர்வதேச இந்து மத தலைவர் ராஜன் ஜெத், ரிக் வேதம், பகவத்கீதை மற்றும் உபனிஷத்களில் இருந்து வரிகளை வாசித்தும், பாடியும் வழிபாடு நடத்தினார். முன்னதாக இந்துமத அடிப்படையில் வேதங்களில் முதன்மையானதாக கருதப்படும் காயத்ரி மந்திரத்துடன் ராஜன் ஜெத், வழிபாட்டை துவக்கினார். அமெரிக்க பாரில்மென்டில் அவர் நடத்தும் 2வது இந்துமத வழிபாடு இதுவாகும். முன்னதாக 2007ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதியன்று அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட முதல் இந்து மத வழிபாட்டை ராஜன் ஜெத் நடத்தி வைத்துள்ளார். அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் 2013ம் ஆண்டு சத்குரு போதிநாத வெய்லான்சுவாமி பிரார்த்தனை நடத்தி உள்ளார். அமெரிக்கா, ஒஹியோவில் உள்ள சிவ- விஷ்ணு கோயிலைச் சேர்ந்த கத்குரு, 2000ம் ஆண்டில் பிரதிநிதிகள் சபையில் உரை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்க சபையில் ஆன்மிக உரை : வழிபாட்டு நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் பிரதிநிதிகள் சபையில் பேசிய ராஜன் ஜெத், பகதரன்யகோபனிஷத்தில் இருந்து மேற்கோள் காட்டி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பொய்யில் இருந்து உண்மையானற்றை பிரிந்தறிந்து காண வேண்டும்; இருளில் இருந்து ஒளியையும், இறப்பில் இருந்து என்றும் அழியாமல் இருப்பவற்றையும் பிரித்தறிய வேண்டும் என தெரிவித்தார். பகவத்கீதை வரிகளை வசித்த அவர், உலக நன்மைக்காக பணியாற்ற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மக்களை மேலும், கல்வி அறிவு பெற செய்ய வேண்டும்; அதுவே அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன் எனவும் அவர் கூறி உள்ளார். பிரதிநிதிகள் சபையில் வழிபாடு நடத்துவதற்காக சபையின் வழிபாட்டு போதகர் பாட்ரிக் ஜெ.கான்ரோய் தன்னை அழைத்ததாகவும் ராஜன் ஜெத் கூறினார். இந்த வழிபாடு அமெரிக்க டிவி.,க்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முதல் இந்துமத வழிபாடு : ராஜன் ஜெத்தின் முதல் இந்து மத வழிபாடு, அமெரிக்க செனட் சபையில் 2007ம் ஆண்டு நடைபெற்றது. அமைதிக்காக இந்த வழிபாடு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு செனட்சபையில் இடம்பெற்றிருந்த கிறிஸ்துவ குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் மத உணர்வுகளையும், மதிப்பையும் குறைப்பதாக உள்ளது என கிறிஸ்துவ பிளாக்களில் செய்தி வெளியிடப்பட்டது. இத குறித்து வாஷிங்டனில் இருந்து போன் மூலம் அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த ராஜன் ஜெத், நம்பிக்கைகள் வேறுபட்டவைகளாக இருக்கலாம்; ஆனால் அவரவருக்கு நம்பிக்கை சுதந்திரம் உண்டு; இந்த போராட்டங்கள் என்னை பாதிப்பதாக நான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.
ராஜன் ஜெத்திற்கு கவுரவம் : அமெரிக்காவில் பல்வேறு மாகாண செனட் சபைகள், அரசு பிரதிநிதிகள் கூட்டங்கள், நகர அரசு குழு கூட்டங்கள் என பலவற்றிலும் துவக்க வழிபாடுகளை நடத்தி வைத்துள்ளார். ராஜன் ஜெத்தின் இந்த மதநல்லிணக்க செயல்பாட்டிற்காக அவர் அமெரிக்க சபைகளில் பலமுறை கவுரவிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பாவில் ரோமா இன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும் ராஜன் ஜெத் குரல் கொடுத்துள்ளார். இதற்காக இவருக்கு சர்வதேச மதநல்லிணக்க தலைவர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல நகரங்களில் அக்டோபர் 25ம் தேதியை (ராஜன் ஜெத்தின் பிறந்த தினம்) ராஜன் ஜெத் தினமாக கொண்டாடி வருகின்றனர். உலகின் பழமையானதும், 3வது மிகப் பெரிய மதமுமான இந்து மதத்தை அமெரிக்கர்களிடம் பரப்புவதில் பெரும் பங்காற்றி வருகிறார்,ராஜன் ஜெத். தற்போது அமெரிக்காவில் 1 பில்லியல் இந்து மத ஆதரவாளர்களும், 3 மில்லியன் இந்துக்களும் உள்ளனர்.