இந்திய இல்லங்கள் பலவற்றில் வீட்டின் முன் முற்றத்திலோ, பின்புறத்திலோ, நடு முற்றத்திலோ ஒரு துளசி மாடம்-துளசிச் செடி வைக்கப்பட்டுள்ள ஒரு பீடம் உண்டு. தற்காலத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் (அபார்ட்மென்ட்) வசிப்பவர்கள் கூட மண்சட்டியில் துளசி வைத்திருக்கின்றனர். வீட்டுப் பெண் மணி துளசிச் செடிக்குத் தினந்தோறும் நீர் ஊற்றி, செடிக்கு முன் விளக்கேற்றி, அதனை வலம் வந்து வணங்குவாள். துளசிச் செடியின் தண்டு, இலை, விதை, செடி நடப்பட்டுள்ள மண் ஆகிய அனைத்தும் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இறைவனுக்குப் படைக்கப்படும் உணவின் மேல் ஒரு துளசி இலை வைப்பது வடநாட்டவர் வழக்கம். பூஜையின் போது இறைவனுக்கு- விசேஷமாக விஷ்ணுவிற்கும் விஷ்ணுவின் அவதாரங்களுக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.