பதிவு செய்த நாள்
25
ஜூன்
2014
12:06
தேவதானப்பட்டி : குள்ளப்புரத்தில் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நீலகண்ட ஈஸ்வரன் கோயில் திருப்பணிகள் முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரத்தில் பாண்டிய மன்னன் காலத்தில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில், நீலகண்ட ஈஸ்வரன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோயில் கட்டிய காலத்தில்தான் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 800 ஆண்டு பழமையான இக்கோயில்கள் இப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஈஸ்வரன் லிங்க வடிவிலும், வள்ளி தெய்வானையுடன் முருகன், 63 நாயன்மார்கள் படம், வடக்கு பக்கம் கணபதி, தெற்கு பக்கம் சுப்பிரமணிய சுவாமி, எதிர்புறம் நந்தி, அன்னபூரணித்தாய், வைரவர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 6 கால பூஜை நடந்தது. இக்கோயிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் உள்ளது. சில ஆண்டுகளாக அமாவாசை, பிரதோஷம் மற்றும் சில முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வெளியூரில் இருந்து பூசாரி வந்து செல்கிறார். கும்பாபிஷேகப்பணிகள்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் துவங்கியது. 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி துவங்கியது. பொதுமக்கள் சார்பில் 35 ஆயிரம் ரூபாய் பங்குத் தொகையாக தரப்பட்டது. கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் சரி செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகளும் முடிந்தது. சிற்பங்களுக்கு பெயின்ட் வேலை நிறைவடைந்துள்ளது. ஓராண்டிற்கு முன்பே பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இதனால் சிற்பங்களில் உள்ள பெயின்ட் சேதமடைந்து வருகிறது.பொதுமக்கள் கூறுகையில், "கோயிலில் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் ஓராண்டாக எதற்காக கும்பாபிஷேம் தடைபட்டுள்ளது என்று புரியவில்லை. மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றால் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த வேண்டும், என்றனர். அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி சுதா கூறுகையில்," பணிகள் நிறைவடைந்துள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பணிகள் துவங்கி உள்ளது. இதற்காக நன்கொடையாளர்களை சந்தித்து வருகிறோம். விரைவில் கும்பாபிஷேம் நடக்க உள்ளது, என்றார்.