பதிவு செய்த நாள்
26
ஜூன்
2014
12:06
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுள்ள திருக்கொட்டகை, தனியார் நன்கொடை மூலம், புனரமைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் திருக்கொட்டகை (கோ-சாலை) அமைந்துள்ளது. இங்கு, தமிழக முதல்வர் வழங்கிய பசுமாடு மற்றும் பக்தர்கள் வழங்கிய, 13 பசு மாடுகளும், ஆந்திரா மாநில நந்தி காளை ஒன்றும், பத்து கன்று குட்டிகளும் உள்ளன. தினமும் காலை விஸ்வரூப நிகழ்ச்சிக்கு, கோ பூஜைக்கு, முதல்வர் வழங்கிய பசு மாட்டை பயன்படுத்துகின்றனர். கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், திருக்கொட்டகையிலுள்ள பசுகளை தரிசித்து, கீரை, தட்டு, பழங்களை வழங்குகின்றனர். தனியார் நன்கொடை, 35 லட்சம் ரூபாயில், திருக்கொட்டகை புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. பசுக்கள் கட்டப்படும் இடத்தில் தளங்கள், குளிர்ச்சியை ஏற்படுத்தும் கற்களை பதித்துள்ளனர். கழிவுநீர் வெளியேற, வடிகால் வசதியும், பசுக்களுக்கு காற்று வசதிக்கு ஃபேன்கள், ஈ, தினாசு (ரத்தம் உறுஞ்சும் உன்னி)களை அழிக்க, அல்ட்ரா வைலட் லைட் ஈக்களை கவரும் இயந்திரத்தை பொருத்தி உள்ளனர். மேலும், சுவர் மற்றும் தூண்களில் உப்பு படிவத்தை அப்புறப்படுத்தி அழகு படுத்தியுள்ளனர். பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை, திருக்கொட்டகையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.