பதிவு செய்த நாள்
27
ஜூன்
2014
12:06
உத்திரமேரூர் : சாலவாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வாழாத்தம்மன் கோவிலை, புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் பகுதியில் தீர்த்தக்குளத்தின் கரை பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான பழமை வாய்ந்த வாழாத்தம்மன் கோவில் உள்ளது.வாழ்வில் ஏற்படும் தோல்வி, விரக்திகளால் சோர்ந்து போனவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டால், புத்துணர்ச்சி பெற்று மீண்டும் இழந்ததை அடைவர் என்பது ஐதீகம்.தீர்த்தக்குளத்தின் கரை மீது இக்கோவில் உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் அப்பகுதியை சேர்ந்த சிலர், குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினர். இதனால், கோவிலுக்கு செல்ல முறையாக வழியின்றி பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து, நாளடைவில் கோவிலும் பராமரிப்பின்றி போனது.தற்போது கோவிலை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து, கோவில் கட்டடத்தின் மேற்பகுதிகளில் மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.மரத்தின் வேர்கள் கோவில் கட்டடத்தின் உள்பகுதிகளில் புகுந்துள்ளதால், கோவில் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.எனவே, இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முறையாக வழி ஏற்படுத்தி, கோவில் கட்டடத்தின் மீது வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.