நோன்பு காலத்தில் பசித்திருப்பதில் இன்பம் காண வேண்டும். நமக்கு பசியின் அருமை தெரிந்தால் தான், பசித்திருக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். அதேநேரம், பசி வந்து விட்டதே என்பதற்காக யாரிடமும் கை நீட்டுவதும் கூடாது. பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள். பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. ‘ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல், மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்,” என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள். ‘ஒருவன் யாசகத்தின் (கைநீட்டுதல்) ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான்,” என்றும் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும். பசியைப் பொறுத்துக் கொள்வோம். இறைவனின் இன்னருளைப் பெறுவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.53 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.18