பதிவு செய்த நாள்
02
ஜூலை
2014
01:07
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, இந்து சமய அறநிலையத்துறையினர் திறந்துள்ளனர். பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பக்தர்கள் சிரமம்: கோயில்களில் பூஜை பொருட்கள் வாங்க சென்றால், அனைத்து கடையினரும் சிண்டிகேட் அமைத்து. அவர்கள் வைத்த விலையில் தான் பொருட்களை பக்தர்கள் வாங்கும் நிலை ஏற்பட்டது. ஏழை மக்கள் பூஜை செய்யாமல், சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதுநிலைக் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மலிவு விலையில் பூஜை பொருட்கள், பக்தர்களுக்கு விற்பனை செய்ய கடைகளை திறக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது.
50 ரூபாயில் ஒன்பது பொருள்: இதன்படி திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்பது வகையான பொருட்கள் 45 ரூபாய்க்கும், அர்ச்சனைக்கு 5 ரூபாய், என மொத்தம் 50 ரூபாயில் அனைத்தும் வழங்கப்பட்டது. இதில் ஒரு தேங்காய், இரு வாழைப்பழங்கள், பத்தி, சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பை உட்பட ஒன்பது பொருட்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் மலிவு விலையில் வழங்கப்பட்ட பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் தனியார்கள் வைத்துள்ள பூஜை பொருட்கள் கடைகள் விற்பனை மந்தமாக இருந்தது.