வில்லியனுார்: சேந்தநத்தம் ஒண்டி ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வில்லியனுார் அருகே உள்ள சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதியதாக அமைக்கப் பட்டுள்ள பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா ÷ நற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு கோ பூஜை, தன பூஜை நாடிசந்தனம், காலை 9:30 மணிக்கு மேல் கலச புறப்பாடு, அதனை தொடர்ந்து வலம்புரி விநாயகர், பாலமுருகன், பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 1:30 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கண்ணபிரான் மற்றும் சேந்தநத்தம் கூடப்பாக்கம், முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.