கரூர்: கரூர் அருகிலுள்ள தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கரூர் தாந்தோணிமலையில், ‘தென் திருப்பதி’ என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் உள்ளது. கோவிலில் கடந்த, 2000ம் ஆண்டில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுக்கு மேலானதால், இக்கோவிலில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அனுமதியளித்தது. இதையடுத்து, கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு, வெங்கடாஜலம் தலைமையில் திருப்பணிகுழு அமைக்கப்பட்டுள்ளது.கோவில் திருப்பணிகளை, மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்துக்கு தங்கக் கவசம் சாத்தப்பட உள்ளது. செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.