பதிவு செய்த நாள்
09
ஜூலை
2014
02:07
பழநி : உலகநலன் வேண்டி, பழநி மலைக்கோயிலில் நாளை 108 சங்குபூஜையுடன் அன்னாபிஷேகம் நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனியில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நாளை காலை 10 மணிக்கு பாரவேல் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளில், பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கலசங்கள் வைத்து, சிறப்பு யாக பூஜைகள் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிக்காலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு, சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவர் சிரசில் மஞ்சள் அன்னம் கிரீடமாக சூட்டப்பட்டு, வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதங்களில் படைக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை, மகாதீபாராதனைகள் நடக்கிறது.இதைப்போல், ஜூலை 11ல் திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு மேல்(சாயரட்சை பூஜையில்) அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 12-ல் பெரியநாயகியம்மன் கோயிலில் சாயரட்சையில் பெரியநாயகியம்மன், சிவன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 13 ல் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகம் செய்து வருகிறது.