பதிவு செய்த நாள்
09
ஜூலை
2014
02:07
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அபயநரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, மோரனப்பள்ளி கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அபயநரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த, 7ம் தேதி, காலை, 5.30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதசேவை, ப்ராண பிரதிஷ்டான ஹோமம், மஹாபூரணாகுதி, கும்பஉத்ஸவம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, திருநாராயணபுரம் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதையடுத்து, அபயநரசிம்மரும், புதிய மூலவரும் ஒரே சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, அபயநரசிம்மர் சாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.