பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
மதுரை கிழக்கு கோபுர வாசல். அங்கு நகரா அடிக்கும் ஓசை, நாற்புறமும் அதிர்கிறது. எலே நகரா அடிச்சாச்சுலே... மீனாட்சியம்மனுக்குப் பூஜை ஆரம்பிக்கப் போதுவுலே... சட்டுனு வெரசா நடலே மதுரையின் நான்கு கோபுர வாசல்களிலும் மேற்கண்ட வார்த்தைப் பிரயோகங்களை இப்போதும் கேட்கலாம். பேரரசர்களின் பெரும் சாம்ராஜ்ஜியத்திலும், குறுநில மன்னர்களின் பிரதேசங்களிலும் நகரா எனப்படும் முரசு கொட்டி முழங்கியுள்ளது.
பேரிகை, முரசு, தமுக்கு, பறை, கொம்பு, தாரை, தப்பட்டை போன்றவை அறிவித்தல் இசைக்கருவி பட்டியலில் இருந்து வருபவை. இவ்வகையைச் சேர்ந்த இசைக்கருவியே நகரா. பழந்தமிழர் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருந்த முரசு எனப்படும் ஒருமுக தோற்கருவியின் மூதாதை வடிவம் இது.
மொகலாய மன்னர்கள் காலத்தில் இது மிகவும் செல்வாக்குடன் இருந்துள்ளது. அறிவிப்புக் கருவியாக இருந்த இதனை, இசைக்கருவியாக மாற்றிய பெருமை மொகலாய மன்னர்களையே சாரும். பிரபல மொகலாய இசை வடிவமான நவ்பத் கானாவில் இணைந்து இசைக்கப்படும் ஒன்பது இசைக் கருவிகளில் நகராவும் ஒன்று. அக்பர் காலத்தில் நவ்பத் கானா மிகவும் போற்றப்பட்டுள்ளது. அரசவையிலும் இடம் பெற்றிருந்தது. அதன் இசையில் மட்டுமல்ல; நம்மூர் திருமலை நாயக்கரும் சொக்கிப் போனது, தனி வரலாறு.
திருமலை நாயக்க மன்னர், நவ்பத் கானாவைக் கேட்டுச் சொக்கிப் போகிறார். அதனைத் தினசரி கேட்க வேண்டும் என்கிற பேரவா. மொகலாயர் அரசவையில் இருந்த இசைக் கலைஞர்களில் ஒரு குழுவினரை வேண்டிப் பெறுகிறார். மதுரையில் தன் அரண்மனையில் ஒரு பகுதியில் அவர்களைக் குடியமர்த்துகிறார். அவ்வப்போது அந்த இசையைக் கேட்டு மகிழ்கிறார். மதுரையில் அம்மக்கள் வாழ்ந்த தெரு, இப்போதும் நவ்பத் கானா தெரு என்றே அழைக்கப்படுகிறது.
இன்னொரு விதத்திலும் நகரா முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருமலை நாயக்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அபிஷேகம் முடிந்த பின்னரே, உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடித்து வந்தவர். அந்த அபிஷேகச் செய்தியை தம் அரண்மனையில் இருந்தபடியே அறிவதற்காகவே, மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரைக்குமாக ஒரு கி.மீ. (அப்போது கி.மீ. இல்லை( தூர இடைவெளிக்கு ஒன்றாக, சாலை யோரத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரா மண்டபங்களை அமைத்துள்ளார். அபிஷேகத்தின்போது வரிசையாக அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபத்திலிருந்தும் நகரா அடித்து, இறுதியாக அந்த ஒலி அரண்மனைக்குக் கேட்கும். அதனால், அபிஷேக செய்தியறிந்து உணவு உட்கொண்டிருக்கிறார் திருமலை நாயக்கர்.
அதுபோல, வீரபாண்டியக் கட்டபொம்மனும்! இவர், திருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகம் நிறைவு பெற்ற பின்னரே, உணவருந்தும் பழக்கம் கொண்டிருக்கிறார். அதற்கென பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் வரைக்குமாக நகரா மண்டபங்களை அமைத்திருக்கிறார். அந்த நகரா மண்டபங்கள், மேற்குறிப்பிட்ட இரு வழித்தடங்களிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதிலமடைந்து, காலத்தின் மவுன சாட்சிகளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முரசு பற்றிய குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யானை மீது முரசினை வைத்துக் கொண்டு, மக்கள் கூடியிருக்கும் இடங்களில் முரசினை அடித்துச் செய்தியினை அறிவித்துள்ளனர். முரசுக் கட்டிலில் படுத்த மோசிக்கீரனாருக்கு பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசிய வரலாறும் நினைவுக்கு வரலாம். நகரா வேறு; முரசு வேறா என்றும் ஐயம் எழலாம். விடை இதற்கு மிகவும் எளிது. அந்த நகரா தான் இந்த முரசு. இந்த முரசுதான் அந்த நகரா.
இந்த நகராவை எவ்விதம் உருவாக்குகிறார்கள்? பிரம்மாண்டமான கோப்பை அல்லது அரை வட்ட வடிவ மரப்பாண்டத்தின் மீதாக, முக்கால் தரமான எருமைக்கன்று தோலால் வார்க்கப்படுவதே நகரா. மன்னர்கள் காலத்தில் புலியினை வென்ற எருதின் தோலையே, நகரா உருவாக்கப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது புழக்கத்தில் இருக்கும் நகராக்கள் பித்தளை அல்லது இரும்பால் உருவாக்கப்பட்டவை. தோலைப் போர்த்திச் சுற்றி இழுத்து வைத்து வார் கொண்டு, கீழ்ப்பகுதியில் உள்ள கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.
முன் காலத்தில் பரவலாகப் பல கோயில்களில் நகரா இசைக்கும் மரபு இருந்து வந்துள்ளது. தற்போது பல கோயில்களிலும், சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் நகரா இசைக்கருவி பொருத்தி, இயக்கி வருகின்றனர். என்றா<லும் அது மனத்தை ஈர்க்கத்தான் இல்லை. விதிவிலக்காக தற்போதும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலும், சங்கரன் கோயில் சங்கர நாராயணன் கோயிலிலும் நகரா இசைக்கப்படுகிறது. இறுதியாக மதுரைக்கே வந்து விடுவோம். கிழக்கு கோபுர வாசல் அருகே முப்பதடி உயரத்துக்கும் மேலான நகரா மண்டபம். ஒருவர் ஷெனாய் இசைக்க, இன்னொருவர் நகரா அடித்து ஒலி எழுப்புகிறார். அதன் ஒலி ஏகதாள நடையில் பரவுகிறது. தின்... தின்... தின்... தின்திடு... தின்திடு... தின்திடு... இதோ எங்கள் மீனாட்சிக்கு அபிஷேகம் ஆகப்போகிறது.