பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகளில், குடிநீர் பிரச்னையை தீர்க்க, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தெக்களூரில் இருந்து, குழாய்கள் பதிக்கும் பணிகள் துவங்கி, 14 மாதங்கள் ஆகியும், 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளதால், குடிநீரின்றி பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்குவதற்கு, பேருந்து நிலையம், காட்ரோடு மற்றும் சரவணப்பொய்கை ஆகிய மூன்று இடங்களில் தேவஸ்தான குடில்களை கோவில் நிர்வாகம் அமைத்துள்ளது.
4.50 லட்சம் லிட்டர் தேவை : மேலும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நான்கு திருமண மண்டபங்கள் கட்டி, குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. முருகன் கோவில் நிர்வாகத்திற்கு சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு, 1.50 லட்சம் முதல் 2 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. அதுவே, முக்கிய திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்களில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் முதல் 4.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகிறது.
குடிநீர் பற்றாக்குறை : இந்நிலையில், மலைக்கோவில் மற்றும் விடுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாட்டால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், திருத்தணி அடுத்த, தெக்களூர் பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து, நான்கரை கி.மீ., துாரத்திற்கு, பூமியில் குழாய்கள் பதித்து, குடிநீர் கொண்டுவர திட்டமிட்டது. இதற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டரும் விடப்பட்டது. குழாய்கள் பதிக்கும் பணிகள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த பணிகளை ஆறு மாதத்தில் முடிக்கவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 14 மாதங்கள் ஆகியும், குழாய்கள் பதிக்கும் பணி முழுமை அடையாமல், காலதாமதம் ஆகிறது. இதனால், தற்போது மலைக்கோவில், தேவஸ்தான குடில்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெக்களூரிலிருந்து, மலைக்கோவில், தேவஸ்தான விடுதிகளுக்கு, இரண்டு கட்டமாக பணிகள் செய்ய திட்டமிட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக, தெக்களூரில் இருந்து, மேல் திருத்தணி நல்லாங்குளம் அருகில் உள்ள இடும்பன் கோவில் வரை, குழாய்கள் பதித்து, அங்கு ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் குடிநீர் தொட்டி (சம்ப்) கட்டப்படுகிறது. அங்கிருந்து மலைக்கோவிலுக்கு மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது. இரண்டாவது கட்டமாக, மலைக்கோவி லில் இருந்து, தேவஸ்தான குடில்கள், முடி காணிக்கை மண்டபங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு குழாய்கள் பதிப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். குழாய் அமைக்கும் பணி நல்லாங்குளம் வரை முடிந்துள்ளது. தற்போது, 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும். பணிகள் காலதாமதம் ஆவதற்கு, குழாய் பதிக்கும் இடங்கள் நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம், தனி நபர்களின் பட்டா நிலம் மற்றும் வனத்துறை ஆகியோரின் அனுமதி பெற வேண்டி உள்ளதால், காலதாமதம் ஆகிறது.இவ்வாறு அவர் கூறினார்.