பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக, சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும், ஆகஸ்ட், 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவுக்காக, கோவில்கள், குடியிருப்பு பகுதிகள், ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளிட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். இதற்காக, திருச்சி கருமண்டபம் பகுதியில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பால கணபதி, ராஜகணபதி, பிள்ளையார்பட்டி விநாயகர், மூன்று முகம், ஐந்து முகம் என வித விதமான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில், வெளி மாநில கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராஜூதேவ் கூறியதாவது: தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, இயற்கையான பொருட்களை கொண்டு சிலை தயாரிக்கப்படுகிறது. எங்களிடம் உள்ள "கேட்லாக்கை பார்த்து ஆர்டர் கொடுத்தால், இரண்டு அடி முதல், 12 அடி உயரமுள்ள சிலைகள், இரண்டு ஒரு நாளில் தயாரித்து தரப்படும். கடந்தாண்டு, நூற்றுக்கணக்கான சிலைகளை வடித்து, விற்பனை செய்தோம். நடப்பாண்டு, ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். சிலைக்கான மூலப்பொருட்கள், வண்ணங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால், ஓரளவுக்கு ஆர்டர் கிடைத்ததும், சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகள் துவங்கப்படும். சிலைகள், 250 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, அவதாரம் மற்றும் டிஸைனுக்கு ஏற்ப விற்கப்படும், எனக் கூறினார்.