பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
திருச்சி: ஸ்ரீரங்கம், அம்மா மண்டபத்தில், கர்ம காரியங்கள் செய்பவர்கள், கழற்றி விடும் துணிகளை சேகரிக்க கம்பி வலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமேஸ்வரம், மேட்டூர், பவானி கூடுதுறை, கொடுமுடி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை போன்ற இடங்களில், ஆடி அமாவாசை நாளில், இறந்த முன்னோர்களுக்கு கர்ம காரியங்கள் செய்யப்படுகிறது. வரும், 26ம் தேதி ஆடி அமாவாசையின் போது, ஆயிரக்கணக்கான மக்கள், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கர்ம காரியங்கள் செய்வதற்காக வருவர். அவர்களுக்காக, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியினர் இணைந்து, பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காததால், அம்மா மண்டப படித்துறை பகுதி மணலாக உள்ளது. இதையடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், படித்துறை ஒட்டிய காவிரி ஆற்றினுள், இரண்டு ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் மூலமாக தண்ணீரை எடுத்து, ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டிகள், இரண்டு தரைமட்ட தொட்டிகளில் நிரப்பி, 62 ஷவர் குழாய்களில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாஷ்பேசின், கர்ம காரியத்துக்கு பின், ஆற்றில் விடும் துணிகளை போடுவதற்காக, 16 இடங்களில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கம்பி வலை தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.