குன்னூர் : குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தகிரி ஷீரடி சாய்பாபா கோவிலில், ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இங்கு கடந்த 4ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை நடந்த அதிருத்ர மகா யாகத்தில் 64 சடங்குகள் நடந்தது. பின்பு,1008 கலச அபிஷேக தீர்த்தங்களை 16 பேர் கொண்ட குழுவினர் காசிக்கு கொண்டு சென்று, கங்கையில் கரைக்கப்பட்டது.அங்கிருந்து ஆகம சாஸ்திரப்படி, 12 ஜோதிர்லிங்கங்களின் 108 தீர்த்த குடங்களை எடுத்து வந்து, நேற்று முன்தினம் கோவிலில் சுயம்பாக உள்ள உத்பவ லிங்கத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.இந்த விழாவுக்கு, தலைமை வகித்த சித்தகிரி பகவான் சாய்பாபா அறக்கட்டளை செயலாளர் நந்துபாபா பேசுகையில், ""யாகம் மற்றும் ஓராண்டு நிறைவையொட்டி பாபா அன்ன சேவா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு காலையிலும், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மாலையிலும் உணவுகள் இலவசமாக தினந்தோறும் வழங்கப்படும், என்றார். முன்னதாக, பஜனை, சத்சங்கம் ஆகியவை நடந்தன.சித்தகிரி பகவான் சாய்பாபா அறக்கட்டளை தலைவர் சக்திமயி மாதா முன்னிலை வகித்தார்.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமண ஆஸ்ரம தலைவர் மவுனகுரு சத்யானந்த மகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.