பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
லாலாப்பேட்டை: மேட்டுமகாதானபுரம் - ஒமாந்தூர் இடையே சாலை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், ஆமை வேகத்தில் நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மகாதானபுரம். இங்கிருந்து மேட்டு மகாதானபுரம், ஒமாந்தூர், குப்புரெட்டிப்பட்டி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் செல்ல சாலை செல்கிறது. ஒரு வழிசாலை இருந்ததால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், மகாதானபுரம் பிரிவு சாலையிலிருந்து, ஒமாந்தூர் வரை, 5.5 மீட்டர் சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் ஒரு பகுதியில், குழி தோண்டப்பட்டு ஜல்லி போடப்பட்டு உள்ளது. பணி துவங்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், பணிகள் முழுமை பெறாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது, இரு சக்கர வாகன ஓட்டிகள், ஒதுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இரவு நேரத்தில், சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது தெரியாமல் பலரும் தட்டுத் தடுமாறி குழி அருகே செல்கின்றனர். மேட்டுமகாதானபுரத்தில், பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில் வரும் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து பெங்களூரு, மதுரை, திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்ந நிலையில், சாலை மோசமாக இருப்பதால், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். ஆடிபெருக்கு விழா நெருங்குவதால், சாலை அகலப்படும் பணியை அதிகரிகள் துரிதப்படுத்த வேண்டும், என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.