பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம், 5.40 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி ஆகியவை, வருவாயாக கிடைத்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகை, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்த பண்டிகையை முன்னிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்வு ஏற்படுவது வழக்கம். பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் காணிக்கையால், உண்டியல்கள் நிம்பி விடும் என்பதால், நேற்று, கோவில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் துவங்கியது. சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, ஆய்வாளர் உமாதேவி, நிர்வாகி அதிகாரி உமாதேவி, தலைமை எழுத்தர் பிரபு ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல்களில் எண்ணும் பணியில், சுயஉதவிக்குழுவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். உண்டியலில், ஐந்து லட்சத்து, 40 ஆயிரத்து, 171 ரூபாய் பணமாகவும், 34 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி ஆகியவை, வருவாயாக கிடைத்தது. கடந்த ஜூன், 18ம் தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது, எட்டு லட்சத்து, 41 ஆயிரத்த, 868 ரூபாய் பணம், 52 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. நேற்று, உண்டியலில், அதிகளவில் பெண்களின் தாலி, மூக்குத்தி ஆகியன கிடைத்தது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட், 5ம் தேதி, கோவில் வளாகத்தில், 10 இடங்களில், பண்டிகை சிறப்பு உண்டியல்கள் வைக்கப்படுவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.