பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆக., 10ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை முதல் நிகழ்ச்சியாக அங்குரார்பணம் நடந்தது. நேற்று காலை 7.10 மணிக்கு தங்கப்பல்லக்கில் அனுமார் உருவம் பதித்த கொடியினை மேள, தாளம் முழங்க கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.கொடியேற்றத்தை காண ஸ்ரீதேவி, பூமாதேவியருடன், சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7.55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நாணல், தர்ப்பைபுல் சுற்றி தீபாராதனைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.இன்று(ஆக., 3) முதல் தினமும் காலையில் பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோயிலை வலம் வருவார். தினமும் இரவில் பல்வேறு வாகனங்களிலும், புஷ்ப சப்பரத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ஆக., 6ல் காலை 7 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்படும் பெருமாள் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.தேரோட்டம் ஆக., 10ல் காலை 6 முதல் 6.30 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடிக்க நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோட்டைவாசல் வரை பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆக., 11ல் திருவிழா சாற்று முறையும், மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், கண்காணிப்பாளர் சிவராஜேந்திரன், பேஷ்கர் சுப்பையன், உதவி பேஷ்கர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
தொடர்புடைய கோயில்கள் :